மங்கி வரும் மார்க்கக் கல்வி – காரணங்களும் தீர்வுகளும்

இறைவனின் அருளால் தமிழகத்தில் தவ்ஹீது மணம் பரப்பும் மஸ்ஜிதுகளும் மர்கஸ்களும் பெருகிய வண்ணமுள்ளன. அதே நேரம் அந்த மர்கஸுகளுக்கு உயிர்நாடியாகத் திகழும் ஆலிம்கள் எண்ணிக்கை அவற்றை நிரப்புகின்ற அளவுக்கு போதுமானதாக இல்லை. கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. மார்க்கக் கல்வியை கற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் தேய்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலை நீடித்தால் இஸ்லாமிய சமூகம் மார்க்க அறிவுப் பஞ்சத்தால் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்க முடியாததாகிவிடும்  என்ற கவலையுடன் எழுதப்பட்டதே இந்தக் கட்டுரை.

                அண்டை மாநிலமான கேரளாவாக இருந்தாலும் அல்லது வட மாநிலங்களாக இருந்தாலும் அங்கெல்லாம் மார்க்க கல்வித் தாகம் குறையாமல் இருக்கும்போது நமது மாநிலமான தமிழகத்தில் ஏன் இந்த நிலை இதை மாற்றுவதற்கு என்ன வழி என்பதைக் குறித்து ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.

                "முஃமீன்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது, ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும் (கல்வி கற்று) திரும்பி வரும்போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் இதன் மூலம் தவறிலிருந்து விலகிக் கொள்வார்கள்''   (அல்குர்ஆன் 9:122)

                ஒரு ஊரில் உள்ள அனைவரும் மார்க்கத்தின் அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்திருப்பது கட்டாயக் கடமையில்லை, அது சாத்தியமுமில்லை. எனினும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிலராவது இந்த கல்வியைக் கற்பதற்கு தயாராக வேண்டும். அது கட்டாயக் கடமையும் தவிர்க்க முடியாததுமாகும். இது இந்த வசனத்திலிருந்து விளங்கும் உண்மையாகும். ஆனாலும் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட "குர்ஆன் ஹதீஸ்'' என்று பேசும் மக்களுக்கு இது இன்னமும் தெரியாமலே இருப்பது ஆச்சரியமளிப்பதாகும்.

                வெளியூருக்குச் சென்றாவது கற்றே தீர வேண்டிய கட்டாயக் கல்வியான மார்க்கக் கல்வி கற்பதில் நமது சமுதாயத்தில் ஏன் மந்தமான நிலை காணப்படுகிறது? அதற்கான காரணங்கள் என்ன என்பதை அலசுவோம்!

1)      அவசியத்தை உணராதது

                மார்க்கக் கல்வியின் சிறப்பையும் பெருமையையும் சரிவர தெரியாமலிருப்பதோடு அதன் அவசியத்தையும் தேவையையும் நம்மில் பலரும் அறியாமலே உள்ளனர். மார்க்க அறிவு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பள்ளிவாசலில் நடத்தப்படும் இமாமத்தும் குத்பா பிரசங்கமும் தான்! இந்த இரண்டையும் செய்வதற்கு எதற்கு மார்க்கக் கல்வி? சில சின்ன சூராக்களையும் சில வசனங்களின் பொருளையும் சில வரலாற்று சம்பவங்களையும் தெரிந்து கொண்டாலே போதுமே என்ற குறுகிய பார்வையும் சிந்தனையும் நம்மில் பலரிடத்தில் இருக்கிறது. ஆனால் உண்மை நிலை என்ன?

                மார்க்கக் கல்வி என்பது  இமாமத் மற்றும் குத்பாவுக்கு மட்டும் பயன்படுவதுடன்  நின்று விடுவதில்லை, மாறாக, அது  குர்ஆன் ஹதீசை ஆராய்ந்து  சட்டங்கள் பெறுவதற்கும் அதைக் கொண்டு மார்க்க சம்பந்தப்பட்ட தீர்ப்புகள் வழங்குவதற்கும் பொதுமக்களிடம் தூய மார்க்க அறிவை போதிப்பதற்கும் இஸ்லாமியக் கல்விக் கூடங்களை நிறுவி மார்க்க அறிஞர்களை உருவாக்குவதற்கும் ஹதீஸ்களின் தரங்களை பகுத்துப் பார்ப்பதற்கும் தேவைப்படக்கூடிய   ஒரு துறையாகும்.

                மார்க்க அறிஞர்களின் இழப்பு, மார்க்கத்தை சரியாக  விளங்காமல் தப்பும் தவறுமாக தீர்ப்பளித்து அதன் மூலம் மக்களை வழி கெடுக்கின்ற தலைவர்களை உருவாக்கி விடும் என்ற  இறைத்தூதரின் எச்சரிக்கையிலிருந்து  மார்க்க அறிவின் தேவை எத்தகையது என்பதை அறியலாம்.

                குர்ஆனும் ஹதீஸும் போதிக்கின்ற விஷயங்களை சுருக்கமாக நான்கில்  அடக்கி விடலாம்.

                1. கொள்கை, 2. சட்டம், 3. வரலாறு 4. பண்பு. இந்நான்கு விஷயங்களையும் அதன் மூல மொழிகளிலிருந்து முறையாகக் கற்றுத் தேறியவரையே மார்க்க அறிஞர் என்று கூற முடியும்.

                வாழ்க்கையில் ஏற்படுகின்ற மார்க்க ரீதியான அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு தேவைப்படும் பட்சத்தில் அதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சரியாக ஆராய்ந்து தீர்வு சொல்லக் கூடிய தகுதியும் திறமையும் உள்ளவர்தான் மார்க்க அறிஞராக இருக்க முடியும்! இப்படிப்பட்ட அறிஞர்கள் நம்மிடையே இன்று எத்தனைபேர் உள்ளனர்?

                இந்த கண்ணோட்டம் இன்று மாறிக் கொண்டே வருகிறது. மார்க்கத் தீர்ப்பு யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ற அளவுக்கு மார்க்க அறிவைப்பற்றிய பார்வை மழுங்கிப் போய்விட்டது.

                "இமாமத்' பணிக்கு தேர்வு செய்யப்படுகிறவர்கள் கூட அதற்குரிய தகுதியுடன் இருப்பதில்லை. சில மர்கஸ்களில் இமாம் எவரும் நியமிக்கப்படாமலே பொது ஜனங்களில் யாராவது ஒருவர் தொழுகை நடத்தும் அளவுக்கு பொடு போக்குத்தனம்  காணப்படுகிறது.

                நபி (ஸல்) அவர்கள் ஊரில் இல்லாத நேரங்களில் தனக்குப் பகரமாக இமாமத் செய்வதற்கென்று ஒரு குறிப்பிட்ட நபித்தோழரை நியமித்து விட்டுத்தான் செல்வார்கள். இந்த அளவுக்கு அந்த பதவிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். ஆனால் இன்றோ அது ஒரு சர்வ சாதாரணமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

                எனவே ஒவ்வொரு பகுதியிலுள்ளவர்களும் மார்க்க அறிவின் அவசியத்தையும் தேவையையும் முதலில் உணர முன்வர வேண்டும்.

2)      தவறான பார்வை

                மார்க்க அறிஞர் என்றாலே அவர் மிகப் பெரிய பீரங்கிப் பேச்சாளர் என்று சிலர் தவறாக விளங்கி வைத்திருப்பதும் மார்க்க அறிவை தேட முன் வராததற்கு ஒரு முக்கிய காரணம். மார்க்கம் என்றாலே அது பேச்சாற்றல் மட்டும்தான் என்று சமுதாயத்தில் பெரும்பாலானவர்களும் எண்ணி வைத்துள்ளனர். மார்க்க அறிஞர்கள் எல்லோரும் பேச்சாளர்களாக இருப்பதில்லை என்பது எந்தளவு உண்மையோ அதே அளவுக்கு பேச்சாளர்கள் எல்லாம் மார்க்க அறிஞர்களாக ஆகிவிட முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மை!

                யூசுப் எஸ்டேட், அஹ்மத் தீதாத், ஜாகிர் நாயக் மற்றும் டிவிகளில் அவ்வப்போது தோன்றி தங்களது வசீகரப் பேச்சுக்களால் அசத்துகின்றவர்களைப் பார்த்து இவர்களெல்லாம் எந்த மத்ரஸாவில் கற்றார்கள்? இவர்கள் மார்க்க அறிஞர்கள் இல்லையா? என்று லாஜிக் பேசி பேச்சாற்றலை மார்க்க அறிவின் முக்கிய அடையாளமாகக் காட்ட முற்படுகின்றனர் சிலர்.

                மேற்கண்ட பேச்சாளர்கள் மார்க்கத்தை வளர்ப்பதற்காக உழைத்தாலும் அவர்கள் தங்களை உலமாக்களாக ஒருபோதும் சித்தரித்தது இல்லை. மார்க்க சட்டங்களில் மூக்கை நுழைத்து மார்க்கத் தீர்ப்புகள் வழங்க முன் வந்ததுமில்லை, மார்க்க அறிஞர் என்பதற்கும் மார்க்க பேச்சாளர் என்பதற்குமுள்ள வித்தியாசங்களை இந்த பெருமக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளதே இதற்கு காரணமாகும். மேலும் இவர்கள் யாரும் உலமாக்களுடன் போட்டி போடவுமில்லை, அத்தகைய அறிஞர்களை உருவாக்கும் தகுதியும் திறமையும் தங்களுக்கு இருப்பதாகக் கூறவுமில்லை.

                எனவே மார்க்க அறிவும் பேச்சாற்றலும் இரு வேறு தகுதிகள் என்பதை பகுத்தறிய வேண்டும். மார்க்கத்தின் அழகிய போதனைகளையும் அதன் ஆழிய தத்துவங்களையும் மக்களிடம் கூறி பிரச்சாரப்பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் எவ்வளவு பெரிய பேச்சாளர்களாகத் திகழ்ந்தாலும் அவர்கள் உலமாக்கள் ஆகிவிட முடியாது. அவ்வாறு அவர்களும் தங்களைப் பற்றி தவறாக மதிப்பீடு செய்யக்கூடாது. அவ்வாறு மதிப்பீடு செய்வதுதான் மார்க்கக் கல்வியின் பக்கமுள்ள ஈர்ப்பு வெகுவாக குறைந்து போவதற்கு காரணமாகி விடுகிறது.

3)      மிகைப்படுத்திக் கூறும் விளம்பரங்கள்

                மார்க்க அறிவை வளர்க்கிறோம் என்ற பெயரில் ஆர்வக் கோளாறு காரணமாகவோ என்னவோ, குறுகிய கால பாடத்திட்டங்களை வகுத்து அதை விளம்பரம் செய்வதைக் காண முடிகிறது. விளம்பரம் செய்பவர்கள் அதன் யதார்த்த நிலையைச் சொல்லி விளம்பரம் செய்வதை நாம் குறை காணவில்லை. எனினும் சிலர் மிகைப்படுத்தி "ஆசிரியர் துணையின்றி கற்கலாம்' என்றும் மேலும் சிலர் "வீட்டில் இருந்தபடியே அறிஞராகலாம்' என்று கவர்ச்சி கரமான விளம்பரங்கள் வெளியிடுகின்றனர்.

                எந்தக் கல்வியை கற்பதானாலும் அதற்கென பாடத்திட்டம், பாடநூல், கால அளவு, நல்ல ஆசிரியர், சாதகமான சூழ்நிலை இவை அனைத்தும் தேவைப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இது தெளிவாக தெரிந்தும் இவ்வாறு விளம்பரம் செய்வது மோசடியாகும்.

                அனைத்து வகை கல்வியைக் காட்டிலும் குர்ஆன், ஹதீஸ் கல்வி தேவையானதும், விரிவானதும் ஆழமான வாழ்க்கைத் தத்துவங்களை உள்ளடக்கியதுமாகும். இதை குறுகிய காலத்தில் எவ்வாறு கற்க முடியும்? ஆண்டுக் கணக்கில் விரிவுரை எழுதப்பட்ட குர்ஆனையும் ஹதீசையும் ஓரிரு மாதங்களிலோ அல்லது 6 மாதத்திலோ கற்றுக் கொள்ள முடியும். அதையும் தொலை தூர கல்வி வழியாக என்று கூறுவதில் உண்மை இருக்க முடியுமா? மருத்துவம் அல்லது பொறியியல் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு குறுகிய காலப்படிப்பு உண்டா? அல்லது தொலை தூரத் கல்விதான் உண்டா? அல்லது ஆசிரியரின் துணையின்றிதான் படிக்க முடியுமா? அவ்வாறாயின் குர்ஆன் ஹதீஸ் கல்வி இவற்றையெல்லாம் விட மலிந்துவிட்டதா? எனவே இதுபோன்ற விளம்பரங்கள் மார்க்கக் கல்வியின் மீதுள்ள மதிப்பை கூட்டாவிட்டாலும் குறைத்துவிட்டது என்பதுதான் உண்மை!

4)      உலகாதாயப் பார்வை

                மார்க்கக் கல்வியை கற்பதற்கு ஏன் முன் வரவில்லை என்ற கேள்விக்கு பெரும்பாலானவர்களின் பதில் அதைக் கொண்டு வாழ்க்கையை நடத்த முடியாது. பிள்ளைகளின் எதிர் காலத்துக்கு ஏற்றது இல்லை என்பதாகும். சிலபேர் அதிகப் பிரசங்கித் தனமாக சற்று மேலே போய் இந்த கல்வியின் உண்மைத் தன்மையை அறியாமல் பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை என்று கூறுவர்.

                இந்த துறைக் கல்வி என்பது தனித்தன்மை வாய்ந்தது. உலகாதாயம் கலவாதது, இன்னும் சொல்லப்போனால் உலகாதாய நோக்கத்திற்காக இதை படிப்பதோ, படித்துக் கொடுப்பதோ கூடவே கூடாது.

                தஃப்ஸீர், புகாரி, முஸ்லிம் போன்ற குர்ஆன் ஹதீஸ் விளக்கப் புதையல்களையும் பொக்கிஷங்களையும் இஸ்லாமிய உலகத்துக்கு வழங்கிய மகான்கள், மாமேதைகள் இந்த துறைக்காகவே வாழ்ந்து வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். அவர்களுக்கு வேறு எதுவும் இந்த உலகத்தில் நோக்கமாக இருக்கவில்லை. இந்த நோக்கத்திற்காக வாழ்ந்த காரணத்தால் பசிபட்டினி கிடக்கவுமில்லை, எனினும் சில தியாகங்களையும் இழப்புகளையும் சந்தித்தார்கள் என்பது உண்மை! அது எந்த துறையில்தான் இல்லை? அதற்காக அந்த துறையை ஒரேடியாக ஓரம் கட்டுவது என்ன நியாயம்? சொகுசான ஆடம்பரமான வாழ்க்கையில் நாட்டமுள்ளவர்கள்தான் இந்த துறையை புறக்கணிப்பார்கள்.

                பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை என்பவர்கள் அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் பாடத்தில் இணைக்க வேண்டி வலியுறுத்துகின்றனர்.

                மருத்துவத்திலும் பொறியியலிலும் குர்ஆனையும், ஹதீசையும் தனித் தனிப்பாடங்களாக சேர்க்க வேண்டும் என்று இவர்கள் ஏன் வலியுறுத்தவில்லை? காரணம் இரண்டையும் வெவ்வேறு துறைகளாக இவர்கள் பார்ப்பதேயாகும். இதே பதிலைத்தான் நாமும் கூறுகிறோம்.

                குர்ஆனையும், ஹதீசையும் கற்றவர்கள் அதை கற்றபின் வேறு ஒரு பயனுள்ள துறையை தேர்ந்தெடுக்க நாம் ஒருபோதும் தடை கூறவில்லை. மாறாக, அதை வலியுறுத்துகிறோம். எனவே ஒரு துறையில் இன்னொரு துறையைக் கொண்டு நுழைப்பதை நாம் ஏற்கவில்லை.

5)      போதிய விழிப்புணர்வு இல்லை

                பெற்றோரிடம் அல்லது ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் மார்க்கக் கல்வி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. அது பற்றிய பிரச்சாரங்களும் இல்லை.

                எந்தக் கல்வியில் போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளதோ அத்தகைய உலகாதாயத்தை அடிப்படையாகக் கொண்ட கல்விக்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டங்களும் பிரச்சாரங்களும் பரவலாக மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றன. மேலும் அந்த கல்வியில் , உயர் நிலை, மேல்நிலை களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. சிலர் மாணவர்களின் படிப்புச் செலவுகளைக்கூட முழுமையாக ஏற்றுக் கொள்கின்றனர். பொருளாதார ரீதியில் சமூகத்தை தூக்கி நிறுத்தும் நோக்கில் செய்யப்படும் இத்தகைய  சேவைகளை நாம் வரவேற்கிறோம். அவர்களுக்காக நாம் துஆ செய்கிறோம்.

                எனினும் இந்த விழிப்புணர்வில் ஒரு சிறு பகுதியையாவது மறுமை நலனைக் கொண்ட இந்த மார்க்கக் கல்விக்கும் வழங்கலாமே! இதையும் ஊக்கப்படுத்தலாமே! இதுபோன்ற விழிப்புணர்வு மார்க்கக் கல்விக்கு இல்லாததன் விளைவு, உலகாதாயக் கல்வியில் தேர்ச்சி பெறாமல் பின் தங்கிய மாணவர்களை மத்ரஸாவுக்கு அழைத்து வருகின்றனர். இதுவும் ஒரு படிப்புதான் என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாமல்! அப்படிப்பட்ட தரமில்லாத மாணவர்களை சேர்த்துக் கொள்ள மறுக்கும்போது நம் மீதும் நிர்வாகத்தின் மீதும் ஏராளமான முணுமுணுப்புகள்!.

                எனவே சமுதாய ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள் இந்த கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கி இதையும் ஊக்கப்படுத்த முன்வர வேண்டும்.

6)      சில ஆலிம்களின் தவறான போக்கு

                மார்க்கக் கல்வியில் மக்களுக்கு பெரிய அளவில் நாட்டமில்லாவிட்டாலும் மார்க்கம் கற்ற ஆலிம்கள் மீது மக்கள் ஓரளவு நன்மதிப்பும் நம்பிக்கையும் வைத்துள்ளனர். அந்த நன்மதிப்பையும் நல்ல நம்பிக்கையையும் காப்பாற்றுவது உலமாக்கள் மீதுள்ள பொறுப்பாகும்.

                சமுதாயத்தை வழி நடத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் பொதுமக்களுக்கு எல்லா வகையிலும் நல்ல முன் மாதிரியாகச் செயல்பட வேண்டும். சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, வணக்க வழிபாடுகளில் முனைப்பு, தியாக உணர்வு, பொறுமை, சகிப்புத்தன்மை, அடக்கம், பணிவு, பொதுநலம் போன்ற நல்ல பண்பாடுகள் உள்ளவர்களாக விளங்க வேண்டும். மக்களுக்கு நன்மை நாட வேண்டும், அவர்களிடம் குற்றம் கண்டு பிடிப்பதிலேயே குறியாக இருக்கக் கூடாது, அவர்கள் குற்றம் செய்தால் அதை நயமாக மென்மையாக எடுத்துச் சொல்லி திருத்த முன் வர வேண்டும். ""நாங்கள் நபிமார்களின் வாரிசுகள்'' என்று பெருமை பேசுவதிலேயே கவனமாக இருக்கக்கூடாது. பொறுப்பற்ற முறையில் மனம் போன போக்கில் மார்க்க தீர்ப்புகளை அவசரப்பட்டு வழங்கிவிடக் கூடாது , நம்முடைய பொறுப்பை நாம் முறையாக நிறைவேற்றினோமா? என்ற கவலை உணர்வுடன் செயல்பட வேண்டும். பொருள் தேடும் மோகத்தை கைவிட வேண்டும்.

                ஆனால் கசப்பான உண்மை என்னவெனில், இன்றைய ஆலிம்களில் சிலர் சக ஆலிம்களின் நற்பெயரையும் கெடுக்கக்கூடிய வகையில் நடந்து கொள்கின்றனர். தன்னொழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை இழந்து நிற்கின்றனர். நான் ஒரு ஆலிம் என்ற அகந்தை உணர்வுடன் செயல்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களால் சமுதாயத்தை சீர்திருத்த முடியுமா?

                சமுதாய ஒற்றுமையைப்பற்றி மேடை ஏறிப்பேசும் ஆலிம்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டு தலையில் சேற்றை வாரி இறைப்பதை எந்த பொது ஜனத்தால்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

                இத்தகைய ஆலிம்கள் மீதுள்ள அதிருப்தி மார்க்கல்வியின் மீது மக்களுக்குள்ள ஈடுபாட்டை குறைத்துவிட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

7)      தவறான பிரச்சாரம்

                ஆசிரியருக்கு முன்னால் அமர்ந்து கல்வி கற்கும் முறை நபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு நடை முறையாகும். ஆரம்ப காலங்களில் பள்ளி வாசல்களே மத்ரஸாக்களாக செயல்பட்டுள்ளன. பள்ளி வாசலில் ஆங்காங்கே சிறு சிறு வட்டங்களாக அமர்ந்து வேவ்வேறு ஆசிரியர்களிடம் மாணவர்கள் மார்க்க அறிவு பயின்றுள்ளனர். இஸ்லாம் வளர்ந்த வரலாறு படித்த அனைவரும் அறிந்த உண்மை இது! முறையான கல்வி என்பது ஆசிரியரின் துணையுடன் வகுப்பறையில் பயிலும் கல்வியே ஆகும்.

                எனினும் இந்த உண்மை வரலாறு தெரிந்தோ, தெரியாமலோ ஒரு சிலர் மத்ரஸாக்களுக்கெதிராக தப்புப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மத்ரஸாக்களிடம் சென்றுதான் மாக்கம் கற்க வேண்டுமா? அரபி மொழி கற்றவர்கள்தான் அறிஞர்களா? என்றெல்லாம் சில மூடத்தனமான கேள்விகளை கேட்டு மக்களை குழப்ப நினைக்கின்றனர்.

                இந்த கேள்வியைக் கேட்பவர்கள் தங்களின் குழந்தைகளை ஏன் மற்ற கல்விகளை கற்பதற்காக பள்ளிக்கூடம் அனுப்ப வேண்டும்? அவ்வாறாயின் இவர்களது பார்வையில் மார்க்கக் கல்வி மற்ற கல்விகளைவிட மட்டமானது அப்படித்தானே? அரபி மொழியில் தங்களுக்குப் புலமை இல்லை என்பதற்காக அல்லது உலமாக்கள் மீது கொண்ட பொறாமை காரணமாகத்தான் இம்மாதிரி சிந்தனைகள் உருவாகின்றன! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ""மஸ்ஜின் நபவீ'' பள்ளி வாசலாக மட்டுமின்றி பாடசாலை- மத்ரஸாவாகவும் விளங்கியது. அதில் மாணவர்களாக ஸஹாபாக்கள் இருந்துள்ளனர். அவர்கள்தான் வரலாற்றில் "அஸ்ஹாபுஸ்ஸுஃப்பா'' என்ற அடைமொழி கொண்டு அறியப்படுகின்றனர்.

                எனவே இம்மாதிரி தப்பான பிரச்சாரங்களால் மக்கள் குழம்பாமல் பிள்ளைகளை மார்க்கம் பயில மத்ரஸாவுக்கு அனுப்ப வேண்டும்.

 

8)      இலவசக் கல்வி

                நோகாமல் கிடைக்கும் எதற்கும் மதிப்பிருக்காது. மத்ரஸôக்களில் இலவசக் கல்வி என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. கல்வியை இலவசமாகத்தான் வழங்க வேண்டும் என்று இஸ்லாம் அதை கட்டாயப்படுத்தவில்லை. கற்பித்தவர் கட்டணம் பெறுவதை மார்க்கம் அனுமதிக்கவே செய்கிறது. எனினும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் அந்த சேவையை இலவசமாகவே தந்து வருகின்றனர். இத்தகைய செயல் சமூகத்தில் பாதகமான எண்ணத்தை உருவாக்கியுள்ளது. இலவசக் கல்வி என்பதால் அது ஏழைகளின் கல்வியாக மாறிவிட்டது. மத்ரஸாவில் படிப்பவர்கள் எல்லாம் ஏழைகள்தான் என்ற எண்ணமே பொதுமக்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது. எனவே வசதியுள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளை மத்ரஸாக்களில் சேர்த்து படிக்க வைக்க மிகவும் தயங்குகின்றனர். அத்துடன் இந்தக் கல்வியை கற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இந்தக் கல்வி உயர்ந்த எண்ணத்துடன் பார்க்கப்படாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

                உணவு, உடை, உறைவிடம், படிப்பு, பாடப்புத்தகங்கள் என அனைத்தையுமே இலவசப்படுத்தியது இந்தக் கல்வியின் மீது மக்களுக்கு மத்தியில் இருக்கும் மதிப்பை வெகுவாக குறைத்துவிட்டது.

                எனவே ஒரு சிறிய கட்டணமாவது இதற்கு ஈடாக வசூலிக்கப்பட வேண்டும். இல்லையெனில் இது கடைசி வரை ஏழைகளின் கல்வியாகவே இருக்கும்.

9)      மார்க்க அறிஞர்களை மதிக்காத போக்கு

                மார்க்கம் கற்றவர்கள் எல்லா வகையிலும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்களை வெறும் சாதாரண கூலித் தொழிலாளியைப்போல் அல்லது ஏவலாளியைப் போல நடத்தக் கூடாது. மார்க்கம் கற்றவர் அனைவரிலும் சிறந்தவர் என்ற அண்ணல் நபியின் வாக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பலரது முன்னிலையில் அவர்களை மரியாதைக் குறைவாக நடத்தக் கூடாது. அவர்களிடம் குறைகள் தென்பட்டால் அதை கண்ணியமான முறையில் அவர்களிடம் உணர்த்த வேண்டும்.

                மர்கஸ் நிர்வாகிகள் தங்களின் நிறுவனத்தில் பணியாற்றும் ஆலிம்களை நிர்வாகத்தின் ஒரு அங்கமாக - மசூரா கமிட்டியில் இடம்பெறச் செய்ய வேண்டும். அவர்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்க வேண்டும். அவர்களுக்குள் மறைந்திருக்கின்ற நிர்வாகத் திறனை வெளியே கொண்டு வர வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்படிச் செய்யும்போது அந்த நிறுவனப்பணிகளில் அவருக்கு முழு ஈடுபாடு ஏற்படுவதுடன் நிர்வாகிகளுக்கும் ஆலிம்களுக்கும் மத்தியில் நல்ல புரிந்துணர்வும் ஏற்படும். இது அந்த நிறுவனத்தை சிறப்பான முறையில் நடத்திச் செல்ல உதவும்.

                வயதில் சிறியவராக இருந்தாலும், அவரை கண்ணியமாகவே நடத்த வேண்டும். எத்தனை இலட்சங்களை செலவு செய்தாலும் ஒரு ஆலிமுடைய இடத்தை ஒரு பொது ஜனத்தால் ஈடு செய்ய முடியாது. அவரும் அது போன்ற கல்வியறிவை பெற்றாலே தவிர!

                அனைத்து ஆலிம்களும் சமுதாய சீர் திருத்த சிந்தனையோடுதான் பணிகளை ஆரம்பிக்கின்றனர். எனினும் ஒரு சில நிர்வாகிகள் நடந்துகொள்ளும் விதம் ஆலிம்களுக்குள் வெறுப்பையும் வேதனையையும் விதைக்கிறது. இதனால் அவர்கள் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்பட்டு அதன் உச்ச கட்டமாக அந்த துறையைவிட்டே ஒதுங்கிக் கொள்கின்றனர். அவர்களும் மனிதர்கள் தானே!                இதையெல்லாம் வேடிக்கை பார்க்கின்ற பொதுமக்கள் மார்க்கக் கல்வியை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? நமது பிள்ளைகளுக்கும் நாளைக்கு இது தானே நிலை என்று எண்ணத் தோன்றுமல்லவா? பிறகு மார்க்கக் கல்வியை பயிற்றுவிக்கும் எண்ணமே சுத்தமாக மறைந்துவிடும்.

10)   ஊக்கப்படுத்தாமை

                இந்த உலகத்தில் அனைத்து மனிதர்களும் பலவீனமானவர்கள்தான்! இறைத்தூதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல! ஒரு குறிப்பிட்ட எல்லையைத்  தாண்டும்போது மனிதன் தனது உற்சாகத்தை இழந்துவிடுகிறான். தனது பணியில் -வேலையில் தொய்வு ஏற்பட்டுவிடுகிறது. உடலில் சோர்வு தட்டும்போது உற்சாக பானம் தேவைப்படுவது போல உள்ளம் உற்சாகத்தை இழந்துவிடும் போது அதை சுறுசுறுப்புடன் இயங்கச் செய்வதற்கு ஊக்கம் தேவைப்படுகிறது. அந்த ஊக்கம் வெறும் வார்த்தையாகவோ, அல்லது ஏன் பொருளாகவோக் கூட இருக்கலாம்.

                நபிமார்கள் சோர்வடைந்த நேரங்களில் அவர்களுக்கு அல்லாஹ் ஆறுதல் வார்த்தைகளைக் கூறி தேற்றிய சான்றுகள் பல குர்ஆனில் உண்டு!

                எத்தனையோ நபித்தோழர்களை நபி(ஸல்) அவர்கள், அவர்களை ஊக்கப்படுத்தும்விதமாக பாராட்டி புகழ்ந்து பேசிய சான்றுகளும் ஹதீஸில் உண்டு.!

                மறுமை நலனை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு போர்க்களப்பணியாற்றி பல்வேறு நபித் தோழர்களுக்கு அவர்களுக்குரிய "கனீமத்' பங்கை வழங்கியதுடன் சில நபித்தோழர்களை தனிப்பட்ட முறையில் பாராட்டி பரிசுகள் வழங்கி அவர்களை நபி (ஸல்) அவர்கள் கவுரவித்துள்ளார்கள். இந்த செயல் நபித்தோழர்களிடத்தில் மார்க்கத்தில் மேலும் ஈடுபாட்டை அதிகரிக்கக் காரணமாக இருந்ததேயன்றி பொருள் மோகத்தை ஏற்படுத்தவில்லை.

                ஆலிம்களில் சிலரைத் தவிர பெரும் பாலானவர்களும் யாரிடமும் எதையும் வாய் திறந்து கேட்பதில்லை. தேவைகள், சங்கடங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எல்லோரும் சிரிக்கும்போது தானும் சிரித்து எல்லோரும் அழும்போது தானும் அழுது மக்களோடு மக்களாக சுயமரியாதையுடன் நடந்து கொள்கின்றனர்.

                இப்படிப்பட்ட ஆலிம்கள் சோர்ந்து விடாமல் அவர்களின் தேவைகள் அறிந்து நிறைவேற்றுவது, அவர்கள் செய்யும் சேவைகளுக்கு நன்றி தெரிவிப்பது, வரம்பு மீறாத வகையில் அவர்களை பாராட்டுவது போன்றவை அவர்களிடம் மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தரும் என்பதில் ஐயத்திற்கு இடம் ஏது?

                மேலும் ஆலிம்கள் இந்த துறையில் தங்களின் முழு கவனத்தையும் செலுத்த வேண்டியிருப்பதால் தங்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்ள வேறு எந்த தொழிலும் செய்ய இயலாத நிலையில் உள்ளனர், அதற்கு சமுதாயம் அனுமதிப்பதுமில்லை. எனவே தங்கள் பகுதி மக்களின் மறுமை முன்னேத்திற்காக உழைக்கும் ஆலிமை முடிந்தளவு தன்னிறைவு அடையச் செய்திட நிர்வாகிகள் முன் வர வேண்டும்.

                இவ்வாறு செய்வது ஒன்றும் மார்க்கத்திற்கு எதிரானது அல்ல.

                நபி (ஸல்) அவர்களின் ஆட்சிக்குப்பிறகு பொறுப்புக்கு வந்த அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் மக்களிடம் நிகழ்த்திய முதல் உரையில்,

                "இதுவரை என் குடும்பத்தின் தேவைகளை என் உழைப்பால் கிடைத்த வருமானத்திலிருந்து பூர்த்தி செய்து வந்தது உங்களுக்கு தெரிந்ததே. இப்போது நான் பொறுப்புக்கு வந்து விட்டதால் என்னால் வேலைக்குச் செல்ல முடியாது, எனவே என் குடும்பத்திற்குத் தேவையானதை பைத்துல் மால்-பொது நிதியிலிருந்து எடுத்துக் கொள்வேன்''.

                என்று கூறினார்கள்.

                மக்கள் பணியில் ஈடுபடக்கூடியவர்களின் தேவைகளை  மக்கள்தான் கவனிக்க வேண்டும் என்ற உண்மையை அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களின் உரை தெளிவுபடுத்துகிறது.

                இதை ஊதியம், அல்லது சம்பளம் என்று கூறுவது பொருத்தமானது அல்ல, ஏனெனில் ஒரு ஆலிமுக்கு அவர் செய்யும் பணிக்குத் தகுந்த சம்பளத்தை அல்லாஹ் ஒருவனால் மட்டுமே வழங்க முடியும்.

                இத்தகைய செயல் மார்க்கக் கல்வியின் வேகத்தையும் ஆலிம்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

11)   நிர்வாகத்தின் பங்களிப்பின்மை

                அல்லாஹ்வின் கிருபையால் நாளுக்கு நாள் தவ்ஹீத் மணம் பரப்பும் மர்கஸ்கள் மஸ்ஜிதுகள் அதிகரித்த வண்ணமுள்ளன. எனினும் அங்கு பணியாற்றுவதற்கு பொருத்தமான ஆலிம்கள் இல்லை. இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் மாபெரும் பொறுப்பும் கடமையும் அந்தந்த மர்கஸ் நிர்வாகத்தையேச் சாரும்.

                ஆலிம்களை தங்களது பகுதியிலுள்ள மக்களின் இஸ்லாமிய வளர்ச்சிக்காக தயார்படுத்துவதை விட்டுவிட்டு ""எங்கள் பகுதிக்கு ஆலிம்களைத் தாருங்கள்'' என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது? அவரவர் பகுதிக்கு அவரவர்தான் ஆலிம்களை உருவாக்க வேண்டும் என்று இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட 9:22 வசனத்தை படித்துப்பார்த்தால் உண்மை தெரியும். இந்த வசனத்தின் அடிப்படையில் எத்தனை பேர் செயல்படுகிறார்கள்?

                பள்ளிவாசலை உருவாக்குவதைவிட அந்த பகுதிக்கு ஒரு ஆலிமை தயார் செய்ய வேண்டியது தான் முதன் முதல் கடமை. மர்கஸும் பள்ளி வாசலும் சீராக இயங்கவும், பகுதி மக்கள் நல்லறிவு பெறவும் ஆலிம்களின் பங்கு இன்றியமையாதது. ஆலிம் இல்லாத பகுதி நீரில்லா வறண்ட நிலம் போன்றது.

                வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், எத்தனையோ மர்கஸ்களில், கோடைகால (ஒருமாத படிப்பு) பயிற்சியில் பங்கு பெற்றவர்களையும் ஆலிம் படிப்பில் முதலாம் ஆண்டு படிப்பைக்கூட பூர்த்தி செய்யாதவர்களையும் மர்கஸ்களில் தாவாப் பணிகளில் பயன்படுத்துகின்றனர். இது  மர்கஸின் வளர்ச்சிக்கு பாதிப்பைத் தான் ஏற்படுத்துமே தவிர அதனால் ஒரு போதும் நன்மை விளையப்போவதில்லை. பகுதி மக்களின் இஸ்லாமிய அறிவுக் கண் திறக்கப்படாமலே இருந்துகொண்டிருக்கும். மர்கஸின் வளர்ச்சி ஒரு ஜும்ஆ குத்பாவுடன் முடிந்துவிடக்கூடிய தல்ல என்பதை மர்கஸ் நிர்வாகிகள் கவலையுடன் எண்ணிப் பார்த்து ஆலிம்களை உருவாக்க உருப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

                அதன் முதல் கட்ட நடவடிக்கையாக மர்கஸ் நிர்வாகிகள் தங்களின் பிள்ளைகளில் ஒரு பிள்ளையை ஆலிம் ஆக்குவதற்கு முன் வரவேண்டும்.

                ஒரு ஊரில் ஒரு ஜனாஸாவுக்கு தொழுகை நடத்தப்படவில்லையென்றால் அந்த ஊர் மக்கள் முழுவதுமே எவ்வாறு குற்றவாளிகள் ஆவார்களோ அதைப்போல ஒரு ஊர்ப் பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு ஒரு ஆலிமைக் கூட உருவாக்க முன் வராதபோது அவ்வூர் மக்கள் அனைவரும் 9:22 வசனத்தின்படி குற்றவாளிகள் ஆவார்கள்.

முடிவுரை

                சாதாரண மனிதரின் இறப்புக்கு வருந்துவதை விட அதிகமாக ஒரு மார்க்க அறிஞரின் இழப்புக்காக நபி (ஸல்)  கவலைப்பட்டார்கள்.

                மார்க்க அறிஞர்கள் மறைந்து மடையர்கள் தலைதூக்கி மார்க்கத்தை கையில் எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் மார்க்க தீர்ப்புக்கள் வழங்குவதன் மூலம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடுவார்கள் என அஞ்சினார்கள்.

                எனவே மார்க்க அறிவு மங்குவதற்கு நாம் யாரும் காரணமாக இருந்து விடக்கூடாது. அதை வளர்ப்பதற்கான கூட்டு முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

 

S.செய்யித் அலி பைஸி

(முதல்வர்: பிர்தௌசிய்யா அரபிக்கல்லூரி மற்றும்  

கதீஜதுல் குப்ரா பெண்கள் கல்லூரி, நாகர்கோயில்)

               

Thanks : Bro. Abdul Salam, Kottar